புத்தகங்களை வாசிக்கும்போது அது மனசில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தும் என்றார் புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுக்கோட்டை அலுவலகத்தில் ‘ஒவ்வொறு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தின் குழந்தைகளுக்கான நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து கவிஞர் தங்கம்மூர்த்தி பேசியதாவது:-
அட்சய திருத்தியை முன்னிட்டு இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதே நாளில் இங்கே குழந்தைகளுக்கான நூலகம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பத்தரைமாத்துத் தங்கம் புத்தகங்கள்தான். தினந்தோறும் கழுவும் பாத்திரங்கள் பளிச்சென மின்னுவதைப்போல, தினந்தோறும் புத்தகங்களைப் படிக்கும்போது உங்களுக்குள்ளே ஞானஒளி பிறக்கும்.
புத்தகங்களை வாசிக்கும் போது அது மனசில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்துகிறது. சிறுவயது முதலே குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்கான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசிப்பதோடு, புத்தகங்களை சேகரிக்க வேண்டும். அதைக்கொண்டு உங்கள் இல்லம் தோறும் நூலகங்களை உருவாக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான சிறந்த சொத்தாக இருக்கும். இந்த நூலகங்களுக்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கியுள்ளேன். மேலும், வழங்குவேன் என்றார்.
நூலகத்தைத் திறந்து வைத்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் பேசியதாவது: நமது பிறப்பு, இறப்புகளையோ, தாய், தந்தையரையோ, நமக்கான நிறத்தையோ, முகத்தையோ தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை. அதே நேரத்தில் நமக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது.
உங்களுக்கான வாசிப்பு உங்கள் இல்லத்திலிருந்தே தொடங்க வேண்டும். பல வீடுகளில் புத்தகங்களோ, நாளிதழ்களோ இல்லாத சூழல் உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். சரியான புரிதலுக்கும், தெளிவுக்கும், முடிவுகளை எடுக்கும் திறனுக்கும் வாசிப்பு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் வரவேற்றார். அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து, நகர்மன்ற உறுப்பினர் லதா, கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன், முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் க.சதாசிவம் நன்றி கூறினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட குழந்தை விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.