சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன் (55). இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையில் (பெசோ) உரிமம் பெற்று, செங்கமலப்பட்டி அருகே ‘சுதர்சன் பயர் ஒர்க்ஸ்’ என்ற பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது, 7 அறைகள் சேதமடைந்தது. மேலும் சம்பவ இடத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 1 ஆண், 1 பெண் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து விட்டனர். காயமடைந்த 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஜனா, பட்டாசு தனி வட்டாட்சியர் திருப்பதி, ஏடிஎஸ்பி சூர்யமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சுப்பையா, பவித்ரா, முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த விபத்தில் பாறைப்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள் (80), சிவகாசி சிலோன் காலனியைச் சேர்ந்த மச்சக்காளை மனைவி முத்து (57), மத்திய சேனையை சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ் (31) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களது உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.