சென்னையில் வளர்ப்பு நாய்களால் சிறுமி ஒருத்தி கடித்து குதறப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், நடைப்பயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(43). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும், இவர் இன்று காலை தனது மனைவி நீலா (40) உடன் வீட்டு அருகே நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாய் ஒன்று நீலாவின் தொடையில் கடித்துத் குதறியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் சுரேஷ், நாயை விரட்ட முயன்ற போது, அவரையும் அந்த நாய் விடாமல் துரத்திச் சென்று காலில் கடித்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை அடித்துத் துரத்திவிட்டு சுரேஷையும் நீலாவையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நீலா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தெரு நாயை வளர்த்து வரும் மல்லிகாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெருநாய்க்கு கடந்த சில நாட்களாக மல்லிகா உணவளித்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சென்னை நுங்கம்பாக்கத்தில் வளர்ப்பு நாய் ஒன்று கடித்து சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பரங்கிமலை காவலர் குடியிருப்பில் காவலர் ஒருவரின் வளர்ப்பு நாய் ஒன்று 8 வயது சிறுவனை கடித்த சம்பவம் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.