பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 294பி, 354-டி, 506(1), 509 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர். தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரில் 294-பி, 506(1) ஆகிய 2 சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சென்னையில் மட்டும் அவர் மீது நேற்று இரவு 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சேலம் மாநகரில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெண் போலீசார் குறித்து யூடியூபர் சங்கர் கூறிய கருத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசுவது, துன்புறுத்தல், கண்ணியத்தை குலைப்பது ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.