முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையான அரசுக்கு வழங்கிய ஆதரவை எம்எல்ஏகள் வாபஸ் பெற்றிருப்பது மக்களவைத் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். மேலும் பல எம்எல்ஏக்கள் இன்னும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹரியாணாவில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றதால், பாஜக பெரும்பான்மை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் மனோகர் லால் கட்டார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர், “தேர்தலை மனதில் வைத்து யார் எந்த அணிக்கு மாறினாலும் அதனால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது. பல எம்எல்ஏக்கள் இன்னும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். பல தலைவர்கள் எங்களின் ஆதரவுடன் நிற்கிறார்கள் மேலும் அவர்கள் தங்கள் கட்சியினரை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவு பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று விரைவில் தெரியவரும்.
நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு (கர்னல்) ஆதரவாக வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம். ஹரியாணாவில் உள்ள பத்து மக்களவைத் தொகுதியிலும் பாஜக வெற்றி பெறும்” என்று எம்.எல். கட்டார் தெரிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவின் கர்னல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மற்ற இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவினைப் பெற்றுள்ள முதல்வர் நயாப் சிங் சைனி அரசு 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட இரண்டு குறைவாக உள்ளது.
இதனிடையே, ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் திக்விஜய் சிங் சவுதாலா கூறுகையில், “மக்களின் நம்பிக்கை இழந்துவிட்ட ஆட்சியை வீழ்த்த வேண்டிய காரியங்களை ஹூடா முன்னெடுக்க வேண்டும். அவர் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, அவரிடம் சூழ்நிலையை எடுத்துக்கூறவேண்டும்” என்றார்.
முன்னதாக ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர் சிங்ஹுடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதனைத் தெரிவித்தனர். ஹரியாணா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.