தெலங்கானா கனமழை. சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட 7 பேர் பலியான சோகம்

 தெலங்கானா கனமழை. சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட 7 பேர் பலியான சோகம்

தெலங்கானா மாநிலத்தில் கனமழையால் சுற்றுசுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், அந்த வளாகத்திற்குள்ளேயே குடிசை அமைத்து தங்கி இருந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் கடந்த 2 நாட்களுக்கு முன் 40 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.   இந்நிலையில் தெலங்கானாவில் நேற்று இரவு 8.30 மணியளவில் கனமழை பெய்த நிலையில், அந்த தடுப்புச்சுவர் அருகே மழை நீர் முழுவதுமாக தேங்கி நின்றுள்ளது. மழைநீர்புதிதாக கட்டப்பட்ட தடுப்புச்சுவரில் தண்ணீர் ஊறி திடீரென  சுவர் முழுவதுமாக இடிந்து, தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை மீது விழுந்தது. இதில், குடிசைக்குள் தங்கியிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

ஆனாலும் சுவரின் இடுப்பாடுகளுக்குள்  சிக்கி 4 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒடிசா, சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்  தெலங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.