காலாவதியான பீர் குடித்த இருவருக்கு பாதிப்பு : டாஸ்மாக் ஊழியர்கள் மூவர் சஸ்பெண்ட்

சீர்காழி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் பீர் வாங்கி குடித்த இருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னலக்குடி பகுதியில் உள்ள  அரசு டாஸ்மாக் மதுபான கடையில்  காரைமேடு பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (31) மற்றும் நாங்கூர் மேலத் தெருவைச் சேர்ந்த சார்லஸ் (27) ஆகிய இருவர் கடந்த திங்கள்கிழமை  டின் பீர் வாங்கி குடித்துள்ளனர். 

அவர்கள் அதை அருந்திய சில மணி நேரத்தில் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் வந்துள்ளது. இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். 

போலீஸ் விசாரணையில், அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதத்துடன் காலாவதியான பீரைக் குடித்தது தெரியவந்தது. கடையில் விற்கப்பட்ட காலாவதியான பீர் குடித்ததால் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து அலட்சியமாக செயல்பட்டதாக தென்னலக்குடி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வடிவேல், விற்பனையாளர் சங்கர் உள்ளிட்ட மூவரை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.