மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். முன்னதாக தனது பாதுகாப்பு கான்வாயை வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் முன்னே நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து சாலையில் நடந்து வந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்குச் சாவடிக்குள் தனது ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்து பின் தனது விரலில் மையிட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி,” மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு பதிவாக வேண்டும். மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.