தந்தை இறந்த அன்று +2 தேர்வு எழுதிய ராமநாதபுரம் மாணவி 487 மதிப்பெண்

ராமநாதபுரம் அருகேயுள்ள காட்டூரணியை சேர்ந்த மாணவி ஆர்த்தி (17). இவர் ராமநாத புரத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

கடந்த மார்ச் 15-ம் தேதி காலை இவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். அன்று பொருளியல் தேர்வு நடந்தது. தந்தை இறந்த சோகத்தில் இருந்த மாணவியை தேற்றிய உறவினர்கள், ஆசிரியர்கள் அவரை தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். தேர்வு முடிந்த பிறகு தந்தையின் இறுதிச் சடங்கில் மாணவி கலந்துகொண்டார். இந்நிலையில், நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவி ஆர்த்தி 487 மதிப்பெண் எடுத்துள்ளார்.

இது குறித்து மாணவி ஆர்த்தி கூறியதாவது: தந்தை இறந்த அன்று தேர்வு எழுத சென்றேன். தேர்வு முடிவு நன்றாக வந்துள்ளது. சிஏ தணிக்கையியல் படிக்க வேண்டும். அம்மா தெய்வக்கனி வீட்டில்தான் இருக்கிறார். கழிவறை கூட இல்லாத சிமென்ட் ஷீட் கூரை வீட்டில் தான் வசிக்கிறோம். அப்பா இல்லாத நிலையில் மேற் கொண்டு எப்படி படிக்க போகிறேன் என்று தெரியாமல் குழப்பமாக உள்ளது. நான் மேற்படிப்பு படிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும் என்றார்.