பதவியேற்பு விழாவுக்கு உங்களை அழைக்க வந்திருக்கிறேன் : ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலக்கல் பேச்சு

ஒடிசா மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பதவியேற்பு விழாவுக்கு உங்களை (மக்கள்) அழைக்க வந்துள்ளேன் என்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ஒடிசா மாநிலம், பெஹ்ராம்பூரில் இன்று தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசிய பிரதமர் மோடி, “ஜகந்நாதரின் புனித பூமியில் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று அயோத்தியில் உள்ள பிரம்மாண்ட கோயிலில் ராம் லல்லா அமர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு உங்கள் வாக்கு பலம் தான் காரணம். ஒடிசாவில் இரண்டு யாகங்கள் ஒன்றாக நடக்கின்றன. ஒன்று இந்தியாவில் வலுவான ஆட்சி அமைப்பது; மற்றொன்று ஒடிசாவில் பாஜக தலைமையில் வலுவான மாநில ஆட்சி அமைப்பது. ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமையப் போகிறது என்பதை உங்கள் உற்சாகம் காட்டுகிறது.

பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அரசின் காலாவதி தேதி ஜூன் 4. அன்றைய தினம் பாஜகவின் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். ஜூன் 10ம் தேதி, புவனேஸ்வரில் பாஜக முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும். பாஜகவின் முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்க இன்று வந்துள்ளேன்.

ஒடிசாவில் காங்கிரஸ் சுமார் 50 ஆண்டுகளும், பிஜு ஜனதா தளம் சுமார் 25 ஆண்டுகளும் இருந்தன. ஆனால் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்துவிட்டார்கள். ஒடிசாவில் வளமான நிலம், கனிம வளங்கள், கடலோரப் பகுதிகள், பெர்ஹாம்பூர் போன்ற வர்த்தக மையம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பிற அம்சங்கள் உள்ளன.

ஒடிசா செல்வ வளம் மிகுந்ததாக இருக்கும் நிலையில் அதன் மக்கள் ஏழைகளாக இருப்பது ஏன்? இந்தப் பாவத்துக்கு யார் பொறுப்பு? இதற்கான பதில் தான் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம்” என்று பிரதமர் மோடி பேசினார். ஒடிசா மாநிலத்தில் வரும் மே 13ம் தேதி அன்று சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.