அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டுவந்தது.
தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க, உரிமம் வழங்க ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதிலும் குறிப்பாக டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க உரிமம் பெற சவுத் குரூப் என்ற நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம்.எல்.ஏ. கவிதா செயல்பட்டு வருகிறார். இதையடுத்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர். இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.