பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதில், தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 ஆகும். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,60,606, மாணவியர்களின் எண்ணிக்கை 4,08,440, மாணவர்களின் எண்ணிக்கை 3,52,165, மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 1. தேர்ச்சி விவரங்கள் : தேர்ச்சி பெற்றவர்கள் : 7,19,196 (94.56%), மாணவியர் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,25,305(92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் – 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,03,385. தேர்ச்சி பெற்றோர் 7,55,451. தேர்ச்சி சதவிகிதம் 94.03% .
இந்தநிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், நாளை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்ச்சி அடையாத மாணவர்களும் நாளை முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.