உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. அம்மாநில வனத்துறை அளித்துள்ள தகவல்களின்படி கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை 910 காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. மொத்தம் 1,145 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிகரிக்கும் காட்டுத் தீயால், இமயமலை பிரதேச மாநிலத்தின் பச்சைப் படலம் தீயில் விழுங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தல்பி கிராமத்தில் உள்ள தனது பண்ணையில் காட்டுத் தீ பரவுவதை தடுக்க சாவித்ரி தேவி (65) என்பவர் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார். அப்போது அவர் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சாவித்ரி தேவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து அம்மாநிலத்தில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே டேராடூனில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் பிக்ரம் சிங் கூறுகையில், “மே 7 மற்றும் 8ம் தேதிகளில் உத்தராகண்ட் மாநிலத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வரும் மே 11 முதல் தீவிரமடையும். இது காட்டுத் தீயை அணைக்க உதவும்” என்றார்.
இந்த தீ விபத்தால் உத்தராகண்ட் வனத் துறைக்கு ரூ.25 லட்சத்துக்கும் கூடுதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு குடியிருப்பு பகுதிகளுக்கும் காட்டுத் தீ பரவி வருவது தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதில், தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, காட்டுத் தீயை விரைவில் கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை உருவாக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
உத்தராகண்ட் வனத்துறை வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மலைப்பகுதியில் 24 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் 23.75 ஹெக்டேர் காடு பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.