தாராசுரத்தில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 2ம் ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திர விழா

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் ராஜராஜ சோழன் பிறந்த உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திர விழா இன்று நடைபெற்றது.

தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலை இரண்டாம் ராஜராஜசோழன் கட்டுமானம் செய்தார். உலகப் புகழ் பெற்ற யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இக்கோயில், அடிக்கு 1008 சிலைகளைக் கொண்டது என்ற பெருமை உடையதாகும். சிறப்புப் பெற்ற இந்த கோயிலை கட்டிய இரண்டாம் ராஜராஜசோழன் பிறந்த சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திரமான இன்று, கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வரலாற்று தகவல்களைப் பகிரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனர் கோபிநாத் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். முன்னதாக, கோயில் மூலவரான ஐராவதீஸ்வரர் மற்றும் தெய்வநாயகி சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்று, இரண்டாம் ராஜராஜ சோழனின் நினைவுகள் மற்றும் அவரது வரலாறுகளை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியது: “இந்தக் கோயிலைக் கட்டிய இரண்டாம் ராஜராஜசோழனுக்கு 1983-ம் ஆண்டு மே 8-மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள், சித்திரை உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திர விழா விமர்சையாக நடந்துள்ளது.

இதையடுத்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விழா இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி, சதயம், மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டிய முதலாம் ராஜேந்திரன் சோழன் பிறந்த ஆடி, திருவாதிரை ஆகிய 2 பேரது நட்சத்திரத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. இதே போல் தாராசுரம் கோயிலைக் கட்டிய இரண்டாம் ராஜராஜசோழன் பிறந்த சித்திரை, உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று, தமிழக அரசு விடுமுறை அளித்து, விமர்சையாக விழாக்கள் நடத்த வேண்டும்.” என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.