தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் : ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு

வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் வெப்ப  பாதிப்பு சிகிச்சைக்காக  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்  கடந்த ஒரு மாத காலமாகவே கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்தநிலையில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கத்திரி வெயில் நிலவுவதால் மிக அதிக அளவு வெப்பம் பதிவாகி வருகிறது. இந்தநிலையில் அடுத்த 3 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வட தமிழக உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    சென்னையில் கடும் வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் கட்டுமான தொழிலாளி  ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  வேலு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மேலும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25) என்ற கட்டுமானத் தொழிலாளி நேற்று மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.  வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு தாமதமின்றி உடனடியாக சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தால்  உயிரிழப்புகள் ஏற்படா வகையில் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.