இந்து அமைப்பின் தலைவரை கொல்ல 1 கோடி ரூபாய் : குஜராத்தில் மௌலவி கைது

இந்து சனாதன் சங்கத்தின் தேசியத் தலைவர் உபதேஷ் ராணாவை 1 கோடி ரூபாய் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்ட குஜராத் மௌலவியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத்தின் இந்து சனாதன் சங்கத்தின் தேசியத் தலைவராக இருப்பவர் உபதேஷ் ராணா. இவரை பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கொலை செய்ய 1 கோடி ரூபாய் வழங்கி, பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களையும் வாங்க திட்டமிட்டதாக குஜராத்தைச் சேர்ந்த மௌலவி சோஹல் அபுபக்கர் திமோல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சுதர்சன் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் மற்றும் பாஜகவின் தெலங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் மற்றும் அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா ஆகியோருக்கு மௌலவி சோஹல் அபுபக்கர் திமோல் மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக சூரத் காவல் துறை ஆணையர் அனுபம் சிங் கெலாட், கைது செய்யப்பட்ட குற்றவாளி மௌலவி சோஹல் அபுபக்கர் திமோலை அடையாளம் காட்டினார். சோஹல் அபுபக்கர் ஒரு நூல் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்ததுடன், முஸ்லிம் குழந்தைகளுக்கு தனிப்பயிற்சியும் அளித்து வந்துள்ளார். அவர் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து 1கோடி ரூபாய் கொடுத்து இந்து சனாதன் சங்கத்தின் தலைவர் உபதேஷ் ராணாவை கொலை செய்ய முயற்சி செய்தது தற்போது விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் வாங்க முயற்சித்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சூரத் காவல் துறை ஆணையர் அனுபம் சிங் கெலாட் கூறுகையில்,” மௌலவி சோஹல் அபுபக்கர் திமோல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதன் பின் அவரது செல்போனை சோதனை செய்த போது அதில் ஆட்சேபனைக்குரிய விவரங்கள் இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக, உபதேஷ் ராணா கொலைக்கு 1 கோடி ரூபாய் கொடுத்ததும், இதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது” என்றார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் முதற்கட்ட விசாரணையில், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தொலைபேசி எண்களைக் கொண்ட டோகர் மற்றும் ஷெஹ்னாஸ் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்கள் அவரை அணுகியதாக குற்றப்பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்து அமைப்பின் தலைவரை 1 கோடி ரூபாய் கொடுத்து கொலை செய்ய மௌலவி ஒருவர் முயற்சி எடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.