“தனக்கும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கரைச்சுத்துப் புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், தனது தந்தையை கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி அவரது மகன் கருத்தையா, நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்த நிலையில், இன்று அவரது வீட்டின் அருகில் பாதி எரிந்த நிலையில் சடலமாக ஜெயக்குமார் மீட்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாகவும் நெல்லை காவல்துறையில் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். மேலும், கடந்த 30ம் தேதியன்று ‘மரண வாக்குமூலம்’ என்ற தலைப்பில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் பெயரும் இடம்பெற்றிருந்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், “எனக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இருவரும் அண்ணன் தம்பி போல பழகி உள்ளோம். 2019ம் ஆண்டு முதல் எனக்காக மிகவும் பாடுபட்டவர் ஜெயக்குமார். அவரது இழப்பு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு. ஜெயக்குமாரின் கடிதத்தில் என்னுடைய பெயர் குறிப்பிட்டு இருப்பது உண்மை இல்லை. அந்த கடிதத்தில் இருப்பது ஜெயக்குமாரின் கையெழுத்துதானா என்பது குறித்து காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். என் மீதான புகாரில் உண்மையில்லை. அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில் யாரோ சிலர் செயல்படுகிறார்கள். காவல்துறைதான் உண்மையை வெளிக்கொணர வேண்டும்” என்றார்.