“பாலியல் புகார் தொடர்பாக ஹசன் எம்.பி., பிரஜ்வால் ரேவண்ணா உட்பட யாரையும் காப்பாற்றுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா இன்று தெரிவித்தார்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்கு பரமேஸ்வரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலிக்கையில், “யாரையும் உடனடியாக கைது செய்துவிட முடியாது. புகார்கள், ஆதாரங்கள், வழக்கு பதிவு செய்யப்பட்ட பிரிவுகள், அவை ஜாமீன் வழங்கக் கூடியதா, ஜாமீன் வழங்க முடியாததா போன்றவைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது சிஆர்பிசி பிரிவு 41ஏ-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் அவர்கள் ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் நடைமுறைகள் பின்பற்றப்படும்.
நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பது எனது கவனத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாப்பது என்ற கேள்விக்கு இடமே இல்லை. சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு நபர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர். எனவே ஒருவரின் விருப்பங்களின் படி விஷயங்களைச் செய்ய முடியாது.
எஸ்ஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவரின் விமான பயணச் சீட்டு பிற விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவரை இங்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை சிறப்பு புலனாய்வு குழு மேற்கொள்ளும். அவரை இங்கே கொண்டு வருவதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுமா அல்லது அதற்கான வழிமுறைகளை எஸ்ஐடியே கண்டடையுமா எந்த வழிமுறையை பின்பற்றப்போகிறது என்ற முடிவு அதன்வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்கள் வெளியானதன் பின்னணியில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இருப்பதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பா ஹெச்.டி.குமாரசாமியின் குற்றச்சாட்டு குறித்து நானும் கேள்விப்பட்டேன். இதுபற்றி பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நான் பதில் சொல்லமுடியாது. சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை வெளியானதும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது நாம் எதுவும் தெரிவிக்க முடியாது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் இந்த வீடியோகளை யார் வெளியிட்டது, எங்கிருந்து இது வந்தது என்பது தெரியவரலாம். அதன் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம்” என்று அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.