’கோடையின் கொடுமை தீர்ப்பதற்கான தண்ணீர் பந்தல் அமைப்பதற்குகூட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை’ என அமைச்சர் மா.சுப்ரமணியன் பகிரங்கமாக விமர்சித்ததை அடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தண்ணீர் பந்தலுக்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்கட்ட வாக்குப்பதிவாக மக்களவைத் தேர்தல் முடிவடைந்து விட்டது. எனினும் 7 கட்டமாக பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களுக்காக நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வணிகர்கள் தங்கள் வணிகத்தேவைக்காக அதிக தொகை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளை மாநிலத்தின் உள்மாவட்டங்களில் விலக்கி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார்.
தற்போது தேர்தல் ஆணையத்தின் மீதான அடுத்த விமர்சனமாக தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்த ஆதங்கத்துக்கும் விடிவு பிறந்திருக்கிறது. சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ”இந்த கோடைகாலத்தில் பொதுமக்களின் சிரமம் போக்கும் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை” என்று தேர்தல் ஆணையம் மீது ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
”தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது என்பதால் மக்களின் அடிப்படை தேவைகளை செய்ய தேர்தல் ஆணையம் தளர்வு அளித்திருக்கலாம். ஆனால் தரவில்லை. இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. மக்களுக்கு பயன்படும் ஒரு பயிற்சி வகுப்பு நிகழ்சியை நடத்துவதற்கு கூட காவல்துறை, தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றை நாடி அனுமதி கேட்க வேண்டிய மோசமான நிலை உள்ளது” என்று அமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசும்போது, “நான் மருத்துவத் துறை அமைச்சராக இருந்த போதிலும், எவரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவருக்கான உரிய சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவும் முடியாத நிலையில் உள்ளேன். ஏனெனில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் பெயரால் மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஒன்றரை மாதம் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தண்டனைக்கு ஆளாகி உள்ளோம்” என்று சாடி இருந்தார்.
இதனையடுத்து இன்றைய தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல்கள் அமைப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்த தண்ணீர் பந்தல்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக இருக்கக்கூடாது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த தண்ணீர் பந்தல்களையும் கண்காணிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.