கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் காற்று மாசு உண்டான விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் 253 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பை கொட்டப்படுகிறது. குப்பைக் கிடங்கின் வளாகத்தில் இம்மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி மாலை தீப்பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது. 10 ஏக்கரில் தீ பிடித்து, பல டன் குப்பை எரிந்துள்ளது. மாநகராட்சியின் மெத்தன நடவடிக்கையே இதற்கு காரணம் என புகார்கள் எழுந்துள்ளன.
கோவை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கே தான் கொட்டப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் கோடைகாலத்தில் இங்கு தீ விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. இந்தக் குப்பை கிடங்கை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி ஏற்படும் இந்த தீ விபத்தால் உண்டாகும் புகையால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். குப்பைக் கிடங்கில் பிடித்த தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சமீபத்திய தீ விபத்து பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் கோவை குப்பை கிடங்கு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுச்சூழல் விதிகளை மீறி தொடர்ந்து அங்கு குப்பைக் கொட்டப்பட்டு வருவதை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதன்பின் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணையானது மே 28-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.