மக்களவை தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த பிறகும் மொத்த வாக்கு சதவீதத்தை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்காதது சர்ச்சையாகி உள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த 19-ம்தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள செய்தியில், “2 கட்ட தேர்தல் முடிந்த பிறகும் இறுதி வாக்கு சதவீதத்தை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்காதது விபரீதமானது. 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு குறித்தும் தற்காலிக கணக்குகளையே அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஒரு மக்களவை தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பது கூட ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை. வாக்கு சதவீதம் குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அர்த்தமற்றதும், திசை திருப்புவதும் ஆகும். தேர்தல் ஆணையத்தின் செயல் தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கும். 2014-ம் ஆண்டு வரை வாக்காளர்கள் பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெளிவாக இடம் பெற்றிருந்தன. ஏப்.19-ல் முதல்கட்ட தேர்தல் முடிந்து 10 நாட்கள் ஆகியும் இறுதி நிலவர வாக்கு விவரத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. 2 கட்ட தேர்தல் தொடர்பான உத்தேச வாக்குப்பதிவு விவரத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்கு சதவீதத்தை உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டது.