தேனியில் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி, வாக்கு எண்ணும் மையமாக செயல்படுகிறது. கடந்த 19-ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வளாகம் பொதுமக்கள் வர தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த வளாகத்திற்குள் கல்லூரியின் முன்னாள் ஊழியர் ராஜேஷ் கண்ணன் (27) என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கொடுவிலார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸார் ராஜேஷ் கண்ணனை கைது செய்தனர். விசாரணையில் ராஜேஷ் கண்ணன் இக்கல்லூரி செயலாளரின் முன்னாள் வாகன ஓட்டுநர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே, தேனி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி.தினகரன் இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் நிகழும் குளறுபடிகள் களையப்பட வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அக்கல்லூரியின் முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல, நீலகிரி மற்றும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்ன்ணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் அவ்வப்போது செயலிழப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய பாதுகாப்புப்படை, மாநில ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள், நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சிப்பதும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சிசிடிவி கேமிராக்கள் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.