கோவையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து அவர்களை வாக்களிக்க அனுமதிக்கும் வரை கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்கக் கோரி தொடரபட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போதே ஆட்சேபனை தெரிவித்திருக்கலாமே. வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தேர்தல் முடிவை நிறுத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றிவரும் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த சுதந்திரகண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கோவை மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க எனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு வந்திருந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயரும், எனது மனைவியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில் எங்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால்எங்களது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
இதேபோல எங்களது பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களும் கொத்து, கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்.15 அன்றே மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவைதொகுதிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கவேண்டும்” எனக் கோரியிருந்தார்.