காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து

உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள், கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலைபெற நெஞ்சார வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாளை உலகம் முழுவதும் உலக தொழிலாளர்கள் தினமாக மே தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ’காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்’ என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பை போற்றிப் பாடுவார். 8 மணி நேர வேலை, முறையான ஊதியம், ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்தி போராடி, உயிர்பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள், மே நாள். திமுக தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம். ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடி பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.’

’பல்வேறு தொழிலாளர்கள் தொழிற்சங்க பலம் இல்லாமல் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்தனர். அவர்களின் நிலை கண்டு தொழிலாளர்களுக்கு தொழில் முகவர்களிடம் பேசி குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது திமுக ஆட்சி. பல்வேறு திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தோழனாக கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறோம். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1000 என்பதிலிருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது.’

‘கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் அமர்வதற்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பணியாளர்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பிடம், ஓய்வறை மற்றும் உணவருந்தும் அறை, முதலுதவி வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக 1947ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ‘

‘இப்படி தொழிலாளர்களின் நிலைமையில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் திராவிட மாடல் அரசு காத்து வருகிறது. தொழிலாளர் சமுதாயம் நலவாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கப்பட்டுள்ளது.