ஓசூரில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாருதி நகர் பகுதியில் மித்ர லீலா என்ற தனியார் குழந்தைகள் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் 30 படுக்கை வசதிகள் உள்ளன. ஓசூர் அரசனட்டி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் மற்றும் இவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரும் இந்த மருத்துவமனையை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 11:30 மணியளவில் மருத்துவமனை நிர்வாகத்தின் மெயில் ஐடிக்கு அதிக அளவில் வெடிகுண்டுகளை மருத்துவமனையில் வைத்துள்ளதாகவும் அது வெடித்துச் சிதறும் என்றும் ஒரு மெயில் வந்தது. இதையடுத்து மருத்துவமனை உரிமையாளர் நவீன் குமார் சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீஸார் மருத்துவமனைக்கு வந்து நேரில் சோதனை செய்தனர். மேலும் கிருஷ்ணகிரியில் இருந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைப்பெற்றது. மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து ஒரு குழந்தை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த மருத்துவமனைக்கு புறநோயாளியாக சிகிச்சை பெற வந்த மூன்று குழந்தைகள் வேறு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அங்கு பணி செய்து வந்த மருத்துவர்கள் செவிலியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறும் போது, “மர்ம நபர் ஓசூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பி உள்ளார். வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பிய மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.