“இது பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்சினை. நான் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.” என்று ஆபாச வீடியோ சர்ச்சை குறித்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரை அடுத்தது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் உயர் மட்ட குழு கூடியுள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மஜத கட்சித் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் குறித்து கூறும்போது, “எங்கள் குடும்பத்தின் நற்பெயரை கெடுக்க, காங்கிரஸ் செய்த சூழ்ச்சியே இது. எனக்கோ, தேவகவுடாவுக்கோ இதில் எந்த பங்கும் இல்லை. இவை அனைத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல.
இது பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்சினை. நான் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. எனினும், இந்த விவகாரத்தில் தார்மீக ரீதியாக நாங்கள் சில முடிவுகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். பிரஜ்வல் ரேவண்ணாவை நாங்கள் பாதுகாக்க போவதில்லை. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
ஆனாலும், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்துக்கே பொறுப்பு அதிகமாக உள்ளது. நான் அவரின் சித்தப்பாவாக இல்லாமல், நாட்டின் ஒரு சாதாரண மனிதனாக இதில் நடுநிலையோடு இருப்பேன். ஏனென்றால், இது அவமானகாரமான பிரச்சினை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை. இதற்கு முன்பும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக எங்கள் கட்சி போராடியுள்ளது. இப்போதும் அதேபோல் இதனை ஒரு தீவிரமான பிரச்சினையாக பார்க்கிறோம்.
அரசாங்கத்தை யார் நடத்துகிறார்களோ, அவர்கள் தான் இந்த விவகாரத்தில் உண்மையான தகவல்களை அம்பலப்படுத்த வேண்டும். யதார்த்தம் என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தவிருக்கிறோம். சிறிதுநேரம் காத்திருங்கள்.” என்று பேசினார்.