ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றான வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 21-ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினசரி மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மனை முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது, கரைகாரர்கள் சார்பில் ரூ.பல லட்சம் மதிப்பிலான வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டன. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார்.வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வடகாடு போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.