நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த 26ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது, சந்தேகத்திற்கிடமாக 3 நபர்களை போலீசார் சுற்றிவளைத்தபோது, அவர்கள் கொண்டுவந்த பைகளில் ரூபாய் 4 கோடி பணம் இருந்தது. விசாரணையில் அவர்கள் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரியவந்தது.
இதில் சதீஷ் என்பவர் நயினார் நாகேந்திரனின் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றுபவர் என்பதும் நவீன் அவரது சகோதரர் என்பதும் பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனுக்கு வேண்டப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ரூ.4 கோடி பணம் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடையது என்று சதீஷ் வாக்குமூலம் அளித்தார். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தாம்பரம் போலீசார், நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகும்படி 2 முறை சம்மன் அனுப்பியிருந்தனர்.
வருகின்ற மே 2ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், வழக்கு நேற்று சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தொடர்பான ஆவணங்கள், ரயிலில் பிடிபட்ட 3 பேரிடமும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான ஆவணங்கள், செல்போன் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயிலில் பணம் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். 3 பேரிடம் விசாரணை நடத்திய பிறகு கிடைக்கும் தகவல் அடிப்படையில் நயினாருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.