சாமானிய பீடி சுற்றும் தொழிலாளியின் மகளாகப் பிறந்தது தனது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் பலனாக இன்று இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கிறார் ஸ்ரீமதி இன்பா ஸ்டெல்லா. வாழ்க்கையில் சாதிக்க விரும்புவோருக்கு இவர் கடந்து வந்த பாதை சிறப்பான முன்னுதாரணமாகும்.
பட்டதாரிகள் அனைவருக்குமே மத்திய அரசின் குடிமைப்பணியில் தேறுவது என்பது பெருங்கனவு. அதற்காக கனவு காணும் பெரும்பாலானோர் மத்தியில், வெகுச்சிலர் மட்டுமே அந்த கனவை நனவாக்கத் துடிக்கின்றனர். அந்த கனவுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவும் தலைப்படுகின்றனர். அத்தகைய உழைப்பு அவர்களை கவுரவிக்கவும் தவறுவதில்லை என்பதற்கு ஸ்ரீமதியே சாட்சி.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவரது தந்தை சீனிவாசன் சாதாரண பீடி சுற்றும் தொழிலாளி. அவரது சொற்ப வருமானம் வீட்டுக்கு போதுமானதாக இல்லை என்றபோதும் மகள் ஸ்ரீமதி இன்பா ஸ்டெல்லாவை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். தந்தையின் விருப்பப்படியே குடும்ப சூழலை பொருட்படுத்தாது பள்ளிக்கல்வி முடித்து, கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார்.
அதன் அடிப்படையில் கோவை மண்டல பிஎஃப் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். தந்தை சீனிவாசன் உட்பட ஸ்ரீமதியின் குடும்பத்தினர் வெகுவாக மகிழ்ந்தனர். ஆனால் ஸ்ரீமதி ஏனோ திருப்திபடவில்லை. இந்தப் பட்டப்படிப்பை கொண்டு அதிகபட்ச இலக்காக எதனை அடையலாம் என்ற தேடல் ஏற்கனவே அவருக்குள் ஊறிப் போயிருந்தது. அதன்படி யுபிஎஸ்சி தேர்வுகளை அவர் தெரிவு செய்து வைத்திருந்தார். அதே வேளையில் மகள் எப்போது பட்டப்படிப்பு முடிப்பார், குடும்பத்துக்கு ஆதுரமான வருமானம் கிட்டும் என காத்திருந்த தனது குடும்பத்தையும் அவர் ஏமாற்ற விரும்பவில்லை.
எனவே கிடைத்த வேலையில் சேர்ந்தார். பணி நேரம் தவிர்த்த இதர நிமிடங்களை எல்லாம் யுபிஎஸ்சி தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுத்தினார். நாடு நெடுகிலும் இருந்து லட்சக்கணக்கானோர் மோதும் இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வுகளுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். எந்த பின்புலமும் இல்லாதபோதும் கடின உழைப்பு மட்டுமே கரைசேர்க்கும் என்று நம்பினார்.
அவரது அந்த உழைப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. 3 படிநிலைகள் கொண்ட இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான முயற்சிகளில் முதல் 2 முறைகள் தோற்றார். அவற்றை தோல்வியாக கருதாது, அனுபவமாக எடுத்துக்கொண்டார். அதன் விளைவாக மூன்றாவது முறையில் வெற்றி பெற்றார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதாக ஸ்ரீமதி வீட்டில் தெரிவித்தபோது, அதனை முழுமையாக உள்வாங்குவதற்கான போதாமையின்றி அவரது வீட்டார் விழித்தனர். ‘கலெக்டராகப் போகிறேன்’ என்று எளிமைப்படுத்தி சொன்ன பிறகே, மகள் வெற்றியின் உயரத்தையும், உன்னதத்தையும் அந்த எளிய குடும்பத்தால் உணர முடிந்திருக்கிறது.
இந்திய குடிமைப்பணி தேர்வில் இந்தாண்டு தேர்வான 1016 பேர்களில் தேசிய அளவில் 851வது இடம் பிடித்திருக்கிறார் ஸ்ரீமதி இன்பா ஸ்டெல்லா. அவரது எளிய பின்னணியோடு ஒப்பிடுகையில் இது இமாலய சாதனை. ஸ்ரீமதியின் வெற்றியை செங்கோட்டையே போஸ்டர் அடித்துக் கொண்டாடுகிறது. நாம் எங்கே இருக்கிறோம், என்னவாக கஷ்டப்படுகிறோம் என்பதைவிட என்னவாக உயர விரும்புகிறோம் என்பதை நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் என்பதற்கு கண்முன் உதாரணமாகி இருக்கிறார் ஸ்ரீமதி.