மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடிகர் பிரகாஷ் ராஜ் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தார்.
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6, பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வாக்களித்த நடிகர் பிரகாஷ் ராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “என் வாக்கு, என் உரிமை. அது நாடாளுமன்றத்தில் என்னை யார் பிரதிநிதிப்படுத்துவார், என் குரலாக யார் ஒலிப்பார்கள் என்பதை நானே தீர்மானிக்கும் சக்தியைத் தருகிறது. நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது மிகவும் முக்கியம். நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்தேன். கடந்த 10 ஆண்டுகளாக நிலவும் வெறுப்பு, பிரிவினைவாத அரசியலில் இருந்து மாற்றத்தை அளிப்பதாக வாக்குறுதியாக கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளேன்” என்றார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் நீண்ட காலமாகவே மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது சமூகவலைதளங்களில் அவ்வப்போது justasking என்ற ஹேஷ்டேக் கீழ் மத்திய அரசை விமரசித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தேர்தலில் வாக்களிப்பது கவனம் பெற்றது. அவருடைய பேட்டி முக்கியத்துவமும் பெற்றுள்ளது. கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளில் இன்று 14 தொகுதிகளுகு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.