கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018-ம் ஆண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். தீர்ப்பு நாளை முன்னிட்டு, நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். எனினும் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. நேற்று மாலை முதல் நிர்மலா தேவி தலைமறைவு என்றும் சொல்லப்படுகிறது. எனினும் இது உறுதி செய்யப்படாத நிலையில் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.