சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று ஒரு பார்சல் கிடப்பதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்புரவு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள், கழிவறையில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். சுமார் 85 லட்சம் மதிப்புள்ள 1.25 கிலோ கடத்தல் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தங்கக் கட்டிகளை கடத்தி வந்து கழிவறையில் போட்டுச் சென்றது யார்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.