அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 30-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தாங்கள் கோரிய வங்கி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும் (சலான்கள்), அமலாக்கத் துறை வழங்கிய வங்கி சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு வங்கி ஆவணங்களை வழங்கியது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு, செந்தில் பாலாஜி தரப்பில் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணத்துக்கும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. காசோலை, சலான்கள் உள்ளிட்ட ஆவணங்களில் தேதி மற்றும் மாதம் திருத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய, நிபுணர் குழு ஆய்வு அல்லது தடயவியல் துறை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், ஆவணங்களில் எந்த வேறுபாடுகளும் இல்லை. எந்த ஆவணத்திலும் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அசல் ஆவணங்களை வங்கிதான் வழங்கியது. அசல் ஆவணங்கள் மஞ்சள் நிறத்திலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நகலெடுக்கப்பட்ட ஆவணங்கள் கருப்பு வெள்ளை நிறத்திலும் இருப்பதைத் தவிர வேறு எந்த வேறுபாடும் திருத்தமும் இல்லை என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை வரும் ஏப்.30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.