கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டில் 750-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார். 13 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மஞ்சுவிரட்டைக் காண வந்த 70 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் உள்ள மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாயொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 250 காளைகள் பங்கேற்றன. 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் கண்மாய் பகுதியில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடு முட்டியதில் மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மடைக்காரன்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (53) படுகாயமடைந்தார்.
சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.மேலும் 70 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு 21 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். 13 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.