விஜயகாந்திற்கு முழு மரியாதை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், தக்க சமயத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் எனவும் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தென்சென்னை தொகுதி வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “பிரதமர் அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 10 கோடி நபர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமிய மக்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மக்கள் பலனடைந்துள்ளனர். எந்தவித மத பாகுபாடும் இன்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார். அதுவே காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது.
2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார். இப்படி பேசியதை தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சியினர் செய்யவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஸ்டாலின் வடநாட்டிற்கு சென்றால் இந்தி எதிர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். எனவே தான் செல்லவில்லை. திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை. விஜயகாந்துக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் தான் பத்ம விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் விஜயகாந்துக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்படும். அவர் மீது பிரதமரும், பாஜகவினரும் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்” என்றார்.