செட்டிநாட்டில் துவங்கி வைத்தீஸ்வரன் கோயில் வரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நள்ளிரவு மாட்டு வண்டி பாரம்பரிய பயணத்தை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கட்டு ரசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2வது செவ்வாய்க்கிழமை விசேஷ நாளாக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செட்டிநாடு, காரைக்குடி, கீழ்சேவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் நகரத்தார்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை துவங்கி சுமார் 200 கிலோமீட்டர்கள் நடைபாதையாக பயணிக்கின்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை வழியே வைத்தீஸ்வரன் கோயிலை இந்த பாதயாத்திரை அடையும். இந்த பயணத்தை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் பக்தர்கள் இப்பயணத்தை துவங்கினர்.
இப்படி கால்நடையாக வரும் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களையும், வைத்தீஸ்வரன் கோயில் ஆலயத்தில் தையல்நாயகி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வரவும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்படுகிறது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் மாட்டு வண்டிகள், மேல்புறம் கூண்டு, கீழே பொருட்கள் வைப்பதற்கான பெட்டி போன்ற அமைப்புடன் அமைக்கப்படும். இந்த வண்டியில் சிறிய அறைகள், உள்புறம் பயணம் செய்பவர்களுக்கு மெத்தைகள், மாடுகளுக்கான வைக்கோல் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். மேலும் முகத்தடிக்கு கீழே மண்ணெண்ணையால் எரியும் லாந்தர் விளக்கு உதவியுடன் இரவில் மட்டுமே இந்த பயணம் நடைபெறும்.
பாரம்பரியமாக செட்டிநாட்டைச் சேர்ந்த தே.கி.தேனப்ப செட்டியார் என்பவரது மாட்டுவண்டி முன்னே செல்ல, நூற்றுக்கணக்கான மாட்டுவண்டிகள் பின்னே செல்லும். இந்த ஆண்டு 54 வண்டிகள் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளன. ஒரே சமயத்தில் 54 மாட்டு வண்டிகளும் நள்ளிரவு நேரத்தில் மயிலாடுதுறை நகரை கடந்து சென்ற காட்சி பார்ப்பவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
120 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது மாவட்டம் விட்டு மாவட்டம், நெல், அரிசி ஆகிய உணவுப் பொருட்களை கொண்டு செல்ல தடை இருந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அரிசியுடன் மாட்டுவண்டி பயணத்தை அப்போதைய ஆங்கிலேய அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னையில் ஆங்கிலேய ஆளுநரை சந்தித்து சிறப்பு அனுமதி பெற்று இந்த மாட்டு வண்டி பயணத்தை மக்கள் தொடர்ந்து உள்ளனர். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரிய நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.