“அனைத்து கைதிகளுக்கும் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது” – கேஜ்ரிவால் விவகாரத்தில் திஹார் சிறை அதிகாரி விளக்கம்

திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்த நிலையில், “அனைத்து கைதிகளுக்கும் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் இதைப் பற்றி பேசினால், இந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்” என திஹார் சிறைத் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வரான கேஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திஹார் சிறையில் உள்ள தனது கணவரைக் கொலை செய்ய சதி நடக்கிறது. அவர் உண்ணும் ஒவ்வொரு உணவும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் தனக்கு இன்சுலின் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே திஹார் சிறைத் தலைமை இயக்குநர், சஞ்சய் பெனிவால் இன்று இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அனைத்து கைதிகளுக்கும் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அவ்வப்போது தேவையான சோதனைகள் நடத்தப்படுவதன் காரணமாக சில சமயங்களில் உணவு கொடுக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம்.

உணவு கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. நீதிமன்ற உத்தரவு படி, பரிசோதனைகளுக்கு பிறகு அவர் வீட்டு உணவைப் பெறுகிறார். சிறையில் உள்ள சுமார் 900-1000 கைதிகளுக்கு நீரிழிவு நோய் உள்ளது. நான் தினமும் 900-1000 நோயாளிகளை நிர்வகித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, இது பிரச்சினை அல்ல. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் இதைப் பற்றி பேசினால், இந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்.

ஒவ்வொரு சிறையிலும், ஒவ்வொரு கைதிக்கும் இருக்க வேண்டிய சுகாதார வசதிகள் உள்ளதா, மருந்து இருக்கிறதா, கைதிகள் தூங்கும் இடம் சுத்தமாக இருக்கிறதா, குளியலறை சுத்தமாக இருக்கிறதா, அவர்களுக்கு சட்டபூர்வ தீர்வு கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க ஒரு நீதிபதி இருக்கிறார். அதோடு ஒவ்வொரு சிறைக்கும் ஒரு விசிட்டிங் நீதிபதி இருக்கிறார். அவர் கொடுக்கும் அறிக்கையின் படி, நாங்கள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து திஹார் சிறை நிர்வாகம் திங்கள்கிழமை டெல்லி துணை நிலை ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, கேஜ்ரிவால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் எடுத்துக்கொண்டார். சிறை அதிகாரிகளால் முதல்வருக்கு இன்சுலின் மறுக்கப்பட்டதாக கூறுவது தவறானது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.