வெற்றி கணக்கைத் துவங்கியது பாஜக : சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த முதல் வெற்றியாக, குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ம் தேதி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் மே மாதம் 7ம் தேதி 3வது கட்டத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில், 19ம் தேதியோடு வேட்போனு தாக்கல் நிறைவடைந்தது. 20ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. சூரத் தொகுதியில் மொத்தம் 24 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ்பாய் கும்பானியின் வேட்பு மனுவில் பல்வேறு தவறுகள் இருப்பதாக கூறி பாஜக சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி நிலேஷ்பாயின் வேட்பு மனுவை நிராகரித்தார். இதேபோல் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பாட்ஷாலா சுரேஷ்பாய் என்பவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் வேட்பு மனுவில் முன்மொழிவோரின் பெயர்கள் தவறாக இருந்ததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறுதியாக பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் உட்பட 9 பேரின் வேப்பமனுக்கள் ஏற்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்றுடன் வேப்பமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் என்பதால், முகேஷ் தலாலை எதிர்த்து போட்டியிட்ட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றனர். இதனால் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து, அதற்கான சான்றுகளை அவரிடம் வழங்கினார். இதன் மூலம் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.