நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் பணம் பறிமுதல் செய்த விவகாரம் : அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும்; திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த பண பறிமுதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது. இருப்பினும், இதுதொடர்பாக அமலாக்கத் துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கே தள்ளிவைத்தனர்.