சென்னையில் சட்டவிரோத ‘பார்க்கிங்’கை தடுக்கும் கொள்கைகள் 3 மாதங்களில் இறுதி செய்யப்பட்டும் : ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுப்பதற்கான கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவத் என்பவர், சென்னையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதுசம்பந்தமாக விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க கொள்கை வகுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் வரைவு கொள்கையை மாநகராட்சி வகுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 11-ம் தேதி கூடி விவாதித்துள்ளனர். அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வரைவு கொள்கை பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், மூன்று மாதங்களில் இந்த கொள்கை இறுதி செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசுத் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத வாகன நிறுத்தத்தை தடுக்கும் கொள்கையை வகுத்த பின், அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.