கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்தால் அவை என்ன பொருட்கள் என்று வாகனம் முழுவதுமாக சோதனை செய்யப்படுகிறது.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதால் அந்த காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கோவை மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் இருப்பதால் இந்த பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, முள்ளி, வேலந்தாவளம், வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்பட 12 சோதனைச்சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
அத்துடன் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறது. அதுபோன்று கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்தால் அவை என்ன பொருட்கள் என்று வாகனம் முழுவதுமாக சோதனை செய்யப்படுகிறது.
காலியாக லாரியோ அல்லது சரக்கு வாகனங்களோ வந்தால் அந்த வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டது என்ன? கேரளாவில் எந்த பகுதியில் இருந்து வருகிறது? தற்போது எந்த பகுதிக்கு செல்கிறது? அதற்கான ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.