கள்ளிக்குடி அருகே செயல்படும் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடு குறித்து மாசுக் கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கவும், அதுவரை ஆலையை தற்காலிகமாக மூடவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ளது ஆவல்சூரன்பட்டி. இவ்வூர் எல்லையில் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலை கடந்த 8 மாதங்களாக செயல் படுகிறது. உரம் தயாரிப்பதாக கூறி அனுமதி பெற்று விட்டு கோழி மற்றும் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்தனர்.
கே.சென்னம்பட்டி, பேய்க்குளம் ஆகிய ஊர்களில் ஒரு வாக்குக் கூட பதிவாகவில்லை. அதிகாரிகள் பேச்சு நடத்தியதில் ஆலையை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என மக்கள் அறிவித்துவிட்டனர். இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சர்ச்சைக்குரிய ஆலையை உடனே மூட வேண்டும். தவறினால் மக்கள் போராட்டம் பெரிதாகிவிடும் என ஆட்சியருக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு பதிலளித்துள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது உத்தரவில், கழிவு சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடு குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். இதன் முடிவு தெரியும்வரை இடைப்பட்ட காலத்தில் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
எனினும், ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். தவறினால் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவுடன் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபடுவோம் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டலப் பொறியாளர் குணசேகரன் அளித்துள்ள அறிக்கையை ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ளார். இதன் விபரம்: கொக்கலாஞ்சேரி கிராமத்தில் எர்த்வைஸ் ஆர்கானிக் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 21.09.2023-ல் உரிமை வழங்கியுள்ளது. இது 31.03.2026 வரை செயல்பாட்டில் உள்ளது. இங்கு கோழிக் கழிவுகள் 5 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன வசதி கொண்ட அறையில் சேமிக்கப்படுகின்றன. பின்னர் 5 டன் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் 40 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கப்பட்டு, புரோட்டின் பவுடராக பெறப்படுகிறது.
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த 30 மீட்டர் உயரம் உள்ள புகைப் போக்கி உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காற்று மாசு தடுப்பு சாதனங்கள் முறையாக இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. கோழிக் கழிவுகள் வேக வைக்கப்படும் இடம் தவிர மற்ற வெளிப்புறங்களில் துர்நாற்றம் எதுவும் உணரப்படவில்லை. கெமிக்கல் கழிவுகளோ, மருத்துவக் கழிவுகளோ இங்கு கையாளப்படவில்லை. விதிகளின்படி இயங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.