ஜூன் 4-ம் தேதி வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கலைஞரின் 101வது பிறந்த நாள் பரிசாக அமையும் என்று மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “18வது மக்களவைத் தேர்தல் இந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கப்போகிறது. மக்கள் நல அரசியலுக்கும், ஜனநாய அரசியலுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். மதவாத, பாசிச அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இந்தியாவின் மாதிரியாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று நன்றி தெரிவித்ததுடன் அவரிடம் வாழ்த்துக்களையும் பெற்றேன். கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு மேலாக தேர்தல் பரப்புரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் மூன்றாண்டு கால சாதனைகளைச் சொல்லும் போது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்ததை தெரிந்து கொண்டோம்.
ஜனநாயகத்திற்காக மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதே வேளையில் மத அரசியல் புரிந்து மக்களைப் பிளவுபடுத்தும் சாதி மத அரசியல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. வாக்குக் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அது திருச்சி தொகுதி மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஏகோபித்த வரவேற்பை மக்கள் தந்தார்கள். திருச்சி தொகுதியைப் பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வைகோ சார்பிலும், மதிமுக சார்பிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி சென்ற போது, மக்கள் முகங்களில் தெரிந்த மலர்ச்சியே எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று சொல்லும் வகையில் இருந்தது. ஜூன் 4-ம் தேதி வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கலைஞரின் 101வது பிறந்த நாள் பரிசாக அமையும்” என்று கூறினார்.
“இந்தியா கூட்டணியின் சார்பில் நீங்கள் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம் கேட்குமா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மத்திய அமைச்சர் பதவியைப் பற்றி எல்லாம் நான் நினைக்கவே இல்லை” என்றார் துரை வைகோ.