”தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகும் மாதிரி நடத்தை விதிகளின் கீழ் கட்டுப்பாடுகள் தொடர்வது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதன்படி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகிக்கும் முறைகேடுகளை தடுக்க ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களுக்கு கட்டாயம் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுவர்.
வழக்கமாக வாக்குப்பதிவு முடிந்த நாளுடன் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த தேர்தலில் நாடு முழுவதும் மற்ற மாநிலங்கள், அண்டை மாநிலங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்னமும் வாக்குப் பதிவு நடைபெறாத அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் காண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகும் மாதிரி நடத்தை விதிகளின் கீழ் கட்டுப்பாடுகள் தொடர்வது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு மாதிரி நடத்தை விதிகளின் (எம்சிசி) கீழ் கட்டுப்பாடுகள் தொடர்வது அபத்தமானது. இது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும்.
தேர்தலுக்குப் பிறகு எம்சிசி என்ன நோக்கத்துக்காக தொடர்கிறது? ஏதேனும் சந்தேகத்துக்குரிய நோக்கம் இருந்தால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குப் பிறகு சுமார் 7 நாட்களுக்கு எம்சிசி-ஐ தொடரலாம். ஆனால், ஜூன் 4 -ம் தேதி வரை தொடர்வது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வணிகர்களின் குறைகளைக் கேட்டு, குடிமக்கள் மீதான கட்டுப்பாடுகளை கணிசமாக தளர்த்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.