கர்நாடகாவில் பிரதமர் மோடி அலை இல்லை : முதலமைச்சர் சித்தராமையா பேட்டி

கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி அலை இல்லை என்று அம்மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் படித்த கல்லூரி மாணவி நேஹாவை காதலிக்க மறுத்த காரணத்தால் ஃபயாஸ் குத்திக்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இக்கொலைக்கு எதிராக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் நடிகர், நடிகைகளும் குற்றவாளிக்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மைசூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,” ஹூப்ளி மாணவி நேஹா கொலை வழக்கு அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கொலையைச் செய்த கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார். கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சித்தராமையா, எல்லா காலங்களிலும் கொலைகள் நடந்துள்ளன.

கர்நாடகாவைப் போல் மற்ற மாநிலங்களில் அமைதி, ஒழுங்கு இல்லை. ஒருவரின் மரணத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. நேஹா கொலை வழக்கை எதிர்க்கட்சிகள் அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றன. இதற்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடந்தாலும் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ” நேஹா கொலை, லவ் ஜிஹாத் வழக்கு அல்ல. இந்த வழக்கு விசாரணையை அரசு தீவிரமாக எடுத்துள்ளதால் கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி அலை இல்லை. பாஜக வேட்பாளர்கள் மோடியின் பெயரைச் சொல்லி ஓட்டு பிச்சை கேட்கின்றனர்.

மோடி அரசுக்கு எதிராக மக்கள் உள்ளனர். நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகவில்லை. அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றி வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம்” என்றார்.