“மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்” என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கடும் பிரயத்தனம் செய்துவந்த நிலையில் 42 மக்களவை தொகுதியிலும் தனித்துப் போட்டியென்று மம்தா ஷாக் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், “மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்” என்று பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 3 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தொகுதிகளில் (ஏப்.19) இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளைக் கடுமையாக சாடியுள்ளார். முர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி இல்லை. அந்தக் கூட்டணி உருவாக நான் மிக முக்கிய பங்களிப்பு செய்தேன். இந்தியா என்ற பெயரைக்கூட நானே பரிந்துரைத்தேன். ஆனால், இங்கே மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும் பாஜக வெற்றிக்கு வேலை செய்து கொண்டிருக்கிறது.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள். முர்ஷிதாபாத்தில் ராம் நவமி ஊர்வலத்தில் நடந்த கலவரம் பாஜகவால் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது” என்றார்.
ஆனால், ராம் நவமி ஊர்வல கலவரத்துக்கு மம்தா அரசின் மெத்தனமே காரணம் என்று பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. மேற்கு வங்க இந்துக்களை பாதுகாக்க மம்தா பானர்ஜி காக்கத் தவறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டி வருகிறது.