ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 விதமானமத்திய அரசின் உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பதவிகளில் 1,143 காலியிடங்களை நிரப்புவதற்காக மே 28-ம் தேதி முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை அகில இந்திய அளவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.
முதல்நிலைத்தேர்வு முடிவுகள் ஜுன் 12-ம் தேதி வெளியிடப்பட்டன. முதன்மைத்தேர்வுக்கு 14,624 பேர் தேர்வு செய்யப்பட்டனர். செப்டம்பரில் நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. இதன்படி மெயின் தேர்வில் 2,844 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 134 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுமைத்திறன் தேர்வு ஜனவரி 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், முதன்மைத் தேர்வு மதிப்பெண் மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட வெவ்வேறு பணிகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட பட்டியலை யுபிஎஸ்சி நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 1,016 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் பூங்குடி கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் வெள்ளைச்சாமி. இவர் தற்போது சென்னையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பிரசன்ன குமார் அகில இந்திய அளவில் 608ம் இடத்தையும், தமிழ்நாடு அளவில் 24ம் இடத்தைப் பெற்றுத் தேர்ச்சிப் பெற்றுள்ளார். பிரசன்ன குமார் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொண்டு நேர்காணல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை அவரது உறவினர்கள் மற்றும் பூங்குடி கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.