நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், திமுக வேட்பாளர் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயகுமார் உட்பட 16 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 1619 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியல் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது.
நீலகிரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 8.7 சதவீத வாக்குகள் பதிவாகின. காலையில் வாக்குபதிவு மந்தமாகவே இருந்தது. நீலகிரியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கத்தலிருந்து வாக்காளர்களை காக்க பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேலும், குடிநீர் வசதி, முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டிருந்தன.
உதகை புனித சூசையப்பர் கல்வியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தனது வாக்கை பதிவு செய்தார். உதகை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பலர் காலையிலேயே வாக்களிக்க வந்தனர். பல முதியவர்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்னரே தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர்.
முதன்முறையாக வாக்களித்த சவுமியா என்பவர் கூறும் போது, ‘முதன் முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சி. இது புது விதமான அனுபவமாக இருந்தது. அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை கட்டயமாக நிறைவேற்ற வேண்டும்’ என்றார். துளசி நம்பியார் கூறும் போது, ‘‘நான் முதன்முறையாக வாக்களிக்கிறேன். எனது வாக்கை பதிவு செய்தேன். நான் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி’’ என்றார்.