திருச்சி தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தத்தம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்கைச் செலுத்தினர்.
திருச்சி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டில் மையப் பகுதியாக விளங்குகிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்கு திருப்பம் தரும் இடமாக திருச்சியை கருதுகின்றன. தங்களின் மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை திருச்சியில் நடத்தவே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. அரசியலில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது திருச்சி.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கடுமையான போட்டிகள் இருந்தபோதும் அத்தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்ள விரும்பியது. ஆனால், ஒரே ஒரு தொகுதியை மட்டும் மதிமுகவுக்கு வழங்கிய திமுக, அவர்களின் விருப்பப்படி திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது.
திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தொழிலதிபர் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் இந்த தொகுதி அமமுகவுக்கு வழங்கப்பட்டு அக்கட்சியின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இது தவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் களத்தில் உள்ளார். மேலும், பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கும், மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
கடும் போட்டி காரணமாக, மதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 250 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி தொகுதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் குழந்திராயன்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல துரை வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உறையூரில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் வாக்களித்தார்.
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் கே.கே நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சியின் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வாக்கை முறையாக பதிவு செய்துள்ளனர். அனைத்து வேட்பாளர்களுமே கடுமையாக களப்பணி ஆற்றியுள்ள நிலையில் வெற்றி யாருக்கு என்பது ஜூன் 4-ம் தேதி தெரியவரும்.