மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆகவே, மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் இணைந்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவிஎம் மீதான சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் இன்று பதில் அளித்தார். அவர் கூறுகையில், “இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை. இவிஎம்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை. அவை குறித்து உச்ச நீதிமன்றமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நாங்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் போலி வாக்குகள் பதிவாகின்றன என்று கூறுகின்றனர்.
தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் என பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் இதில் உள்ளன. எனவே வாக்களார்கள் வாக்களிப்பதில் மட்டும் களிப்புறட்டும். இது வாக்களித்து மகிழ்ந்திருக்கும் தருணம். எதையும் சந்தேகிக்கும் நேரம் இல்லை. வாக்காளர்களின் வாக்குகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும். மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வர வேண்டும்” என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “சில இடங்களில் மழை பெய்தாலும் மக்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்கின்றனர் என்று களத்தில் இருந்து எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஒவ்வொருவரும் வாக்குச்சாவடியை நோக்கி விரைகின்றனர். ஜனநாயகத்தின் திருவிழாவில் மக்கள் வெகுவாக பங்கேற்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாரம்பரியமாக வாக்குப்பதிவு குறைவாக உள்ள பகுதிகளில் இளைஞர்கள், பெண் வாக்காளர்களை அதிக அளவில் வாக்களிக்க செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய திட்டத்தை வகுத்தது. உள்ளூர் சூழலைப் பொறுத்து அதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டது. பல்வேறு பிரபலங்கள், பெட்ரோல் பம்புகள், வங்கிகள், தபால் நிலையங்கள் என பல்வேறு நிறுவனங்கள் இதில் இணைந்து பணியாற்றின.
மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இளைஞர்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகள் என எல்லா தரப்பு மக்களையும் ஜனநாயக திருவிழாவில் இணைந்து கொள்ள நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். வாக்களிப்பது உங்களின் உரிமை, உங்களின் கடமை, உங்களின் பொறுப்பு, அது உங்களின் பெருமை” என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனது சக தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.எஸ். சந்து ஆகியோருடன் இணைந்து டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உருவாக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேர்தல் நடைமுறைகள் கண்காணித்தார். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.